மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!



விடுதலைப் போரில் பெண்கள் - 13

இந்தியாவுக்கு பூரண விடுதலை வேண்டும் என்ற கோரிக்கை எப்போது எழுந்தது? யார் எழுப்பினார்கள்? என்ற கேள்வியை இன்றைய வரலாற்று மாணவர்களிடம் மட்டுமல்ல இந்தியாவில் யார் எழுப்பினாலும் மிக எளிதாக அதற்கு விடையளிப்பார்கள். காங்கிரஸ் கட்சிதான், அதன் தலைமைதான் என. அனால் அது முற்றிலும் தவறான பதிலாகும். ஆம். இது தவறான பதில்தான். 

வரலாற்று உண்மை என்ன? 1885ல் துவக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி இந்தியாவிற்கு பூரண சுயராஜ்ஜியம் வேண்டும் என 1920ஆம் ஆண்டுவரை கேட்கவில்லை. அதாவது காந்தியடிகள் போராட்ட களத்திற்கு வந்த பிறகும் கூட. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கும் 35 ஆண்டுகளுக்கு பிறகு துவக்கப்பட்ட கம்யூனிஸ்டு கட்சிதான் முதன் முதலில் இந்தியாவுக்கு பூரண சுயராஜ்ஜியம் கேட்டார்கள். இந்த உண்மை எத்துனை பேருக்குத் தெரியும். 1921ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில்தான் பூரண சுதந்திரம் என்ற கோரிக்கையை அதுவும் காங்கிரஸ்கார்கள் அல்ல கம்யூனிஸ்டுகள்தான்  தீர்மானமாக முன்மொழிந்தனர். அந்த கோரிக்கையை  ஏற்றுக்கொள்ளவும் வைத்தனர். 

சுயராஜ்யம் எப்படிபட்டதாக இருக்க வேண்டும் என்பதற்கு அழகான விளக்கமும் கொடுத்தனர். ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பது, நிலவுடைமை ஆதிக்கத்திற்கு முடிவுகட்ட நிலபிரபுத்துவத்தை ஒழிப்பது, பெண்கள் மற்றும் சாதிய ஒடுக்கு முறைகளை ஒழிப்பது, இவைகளை உள்ளடக்கிய சமூக பொருளாதார மாற்றத்திற்காக உறுதியாக போராடுவதுதான் உண்மையான விடுதலை என்றனர். இது காங்கிரசுக்கு கடுமையான நெருக்கடியை தந்தது. இதற்கு பிறகுதான் எளிய மக்களை காங்கிரஸ் கணக்கில் கொண்டது.

மக்கள் திரளை ஈர்க்கும் போராட்டங்களை திட்டமிட்டது. அத்தகைய போராட்டங்களில் முற்போக்கு சிந்தனை உள்ள பெண்கள் ஈர்க்கப்பட்டார்கள். அப்படி ஈர்க்கப்பட்ட போராளிகளில் ஒருவர்தான் ருக்மணி லட்சுமிபதி. யார் இந்த ருக்மணி லட்சுமிபதி? இவர்தான் தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர்! அதுவும் சுகாதாரத்துறை அமைச்சராக அவர் பதவியேற்றவர். இது நடந்தது 1946ஆம் ஆண்டு. 

இவர் 1934ல் சென்னை மகாஜன சபைத் துணைத் தலைவர்; 1936ல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூட்டத்துக்கு தலைமை; 1937ல் சென்னை மாநகராட்சி உறுப்பினர்; அதே ஆண்டு சென்னை சட்டசபை மேலவை துணை சபாநாயகர்; 1946ல் அமைச்சர் என இவர் பல பொறுப்புகள் வகித்தவர். அனைத்துப் பொறுப்புகளிலும் திறம்பட செயல்பட்டவர் மட்டுமல்ல அப்பதவிகளை ஏற்றுக்கொண்ட முதல் பெண்மணியும் அவர்தான். ருக்குமணி பதவி பிரமாணம் செய்துகொண்டபோது நல்ல நேரம் எதுவென கேட்டார்கள். அதற்கு அவர் எல்லாம் நல்ல நேரம்தான் ராகுகாலமாவது கேதுகாலமாவது, எதுவந்தால் என்ன? அதுதான், நம் நாட்டைச் சனியனே பிடித்திருக்கிறதே! அப்புறம் என்ன? என்றார்.  

இன்றைக்கும் பொருந்தும் இந்த அர்த்தம் நிறைந்த வார்த்தைகளை சனா தனம் கொடிகட்டி பறந்த அந்த காலத்தில் உதிர்த்தார் என்பதுதான் ஆச்சரியமான உண்மை. இவர் வைதீக பிராமணக் குடும்பத்தைச் சார்ந்தவர். எனினும் சனா தன பழக்க வழக்கங்களை கடுமையாகச் சாடியவர் என்பதில்தான் அவரது வாழ்வின் பெருமை அடங்கி உள்ளது.  . மனிதத்தைப் போற்றும் சீனிவாசராவ்  சமூகத்தால் ஆச்சாரமாக வளர்க்கப்பட்ட சூடாமணி தம்பதிக்கு 1892ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் நாள் பிறந்தார். 

அவரது வளரிளம் பருவத்தில் அன்றைய வழக்கப்படி அவரது தந்தை இவருக்கு பால்ய விவாகம் செய்து வைத்திட  விரும்பினார். அதற்கான ஏற்பாடுகளை செய்தார். ஆனால் தந்தையின் நண்பரான வீரேசலிங்கம் பந்துலு எனும் தேசபக்தப் போராளி அதைத்தடுத்து ருக்மணி தொடர்ந்து படிக்க வழி செய்தார். பக்கத்து வீட்டு கிறிஸ்தவப் பெண் குழந்தைகள் படித்து முன்னேறுவதைப் பார்த்து தன் மகள் ருக்மணியை பள்ளிக்கு அனுப்புவது தேவை எனதாயும் உடன்பட்டார். ஆனால் இந்த காரணத்திற்
காகவே இவரது உறவினர்கள் இவர்களை சாதியிலிருந்து தள்ளி வைத்தனர். வளர்ந்து வந்த ருக்மணியை அன்றைய மாணவர்களை ஈர்த்த தேசபக்த போராட்டம் மெல்ல ஈர்த்தது. அது குறித்து நிறைய விவாதங்களை மெற்கொண்டார். 

அந்த சமயத்தில் காலில் ஏற்பட்ட காயத்திற்கு வைத்தியம் செய்ய டாக்டர் லட்சுமிபதியிடம் சென்றார். வைத்தியம் செய்கிற காலத்தில் இவருக்கும் டாக்டருக்கும் அன்பு மலர்ந்தது. மனைவியை இழந்த மூன்று குழந்தைக்குத் தந்தையான லட்சுமிபதி மீது ருக்மணி காதல் கொண்டார். பெற்றோர் கடுமையாக எதிர்த்தனர். வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க முயற்சித்தனர். ஆனால் இவரது பிடிவாதமும் தந்தையின் மரணத்தை தொடர்ந்து குடும்பச் சூழலில் ஏற்பட்ட மாறுதல்களும் திருமணத்தை சாத்தியமாக்கியது. தன்னுடைய மனைவியின் படிப்பார்வத்திற்கு லட்சுமிபதி குறுக்கே நிற்காமல் அவரை தொடர்ந்து படிக்க வைத்தார். அதுவும் மருத்துவ கல்வி. ஆனால் இயற்கை பெண்களுக்கு கொடுத்த சாபமான குழந்தை பேறு அவரது படிப்பை பாதியில் நிறுத்தியது.

 அவர் திருமணம் செய்துகொண்ட லட்சுமிபதி ஒரு தேசியவாதி. எனவே அவரது இல்லம் தேசியவாதிகள் வருகைகூடமாக இருந்தது. ருக்மணி அவர்கள் அழைப்பின்பேரில் கள்ளுக்கடை மறியல், சத்தியாகிரகம் உட்பட பல போராட்டங்களில் ஈடுபடலானார். தன் குழந்தைகளுக்கும் முரட்டு கதராடை துணிகளையே உடுத்தி தேசபக்தராக அழகு பார்த்தார். ருக்மணி வைணவ பிராமணக் குடும்பம்.லட்சுமிபதி அதிலேயே வேறு பிரிவு. இந்த சிறு கலப்பே அன்றைக்கு ஏற்கப்படாத ஒன்றாக இருந்தது. இவர்களோ சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து மக்கள் தொண்டாற்றினர். குறிப்பாக முஸ்லிம் பெண்கள் மத்தியில் தொண்டு செய்து அவர்கள் அன்பையும் மரியாதையையும் ருக்மணி ஈட்டினார்.

ருக்மணி பெண் விடுதலைக்கு குரல் கொடுத்தார். கொடுஞ் செயலான பால்ய விவாகத்தை எதிர்த்தார். பெண்கள் முன்னேற்றம் அடைய பெண்கல்வியை வற்புறுத்தினார். இந்தியாவின் விசித்திர பழக்கமான  தீண்டாமையை அறவே வெறுத்தார். அதை நடைமுறையில் நிருபனம் செய்ய முதலில் தன் வீட்டில் பிராமணரல்லாத ஒருவரை சமையல் பணியாளராக அமர்த்தினார். அப்போதும் மனம் திருப்தி கொள்ளாமல் தாழ்த்தப்பட்ட ஒரு சகோதரியை அழைத்து வந்து அவருக்கு சமையல் பயிற்சி அளித்து தன் வீட்டில் அமர்த்திக் கொண்டார். பிராமண சமூகத்தின் எதிர்ப்பைக் கேட்கவும் வேண்டுமோ?

1930ஆம் ஆண்டு வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்பு (சத்தியா கிரகத்தில்) பங்கேற்றார்.ராஜாஜி அப்போராட்டத்தில் தலைமையேற்றார். போராட்ட களத்தில் இருந்த போது அவரது மகளின் உடல் நலம் சீர் கெட்ட செய்தி அறிந்தார். தேச விடுதலை   போராட்ட களமா அல்லது குழந்தை பாசமா என்ற கேள்வி அவர் முன் எழுந்தது. அவர் எவ்வித தயக்கமும் இல்லாமல் தேசமே முதலில் என முடிவெடுத்தார். போராட்டத்தின் நடுவில் போக மறுத்தார். ஆயினும் சக போராளிகள் வற்புறுத்தலால் வீடு சென்றார். மருத்துவரான அவரது கணவனின் கவனிப்பால் அவரது செல்ல மகள் உடல் தேறிய செய்தி கிடைத்தது. அதை அறிந்து சிறிதும் தாமத்திக்காமல் மீண்டும் போராட்ட களம் புகுந்தார். உப்புக் குவியலின் மேலே படுத்து மறியல் செய்து கைதானார். ஓராண்டு சிறைப்படுத்தப்பட்டார்.

1932ஆம் ஆண்டு ஜனவரி 26 காங்கிரஸ் கட்சி அறிவித்த சுதந்திர தினம் கடைப்பிடிக்கும் போராட்டத்தில் காசா அப்பாராவ் என்ற தேசபக்தர் போலீஸ் தடியடியால் காயமுற்றுகிடந்தபோது கட்டுக்காவலை மீறி நுழைந்து அவருக்கு முதல் உதவி செய்தார்.போலீஸாருடன்  நீண்ட நேரம் வாதாடியே இதை அவரால் செய்யமுடிந்தது. உப்பு சத்தியாகிரகத்தின் போதும்,  தனிநபர் சத்தியாகிரகத்திலும் ஈடுபட்டு இரண்டு முறை சிறைப்பட்டு தண்டனை அனுபவித்தார்
.
1946ல் இவர் அமைச்சராக பொறுப் பேற்றபோது அன்றைக்கு சர்ஜன் ஜெனரல் பதவியிலிருந்த வெள்ளையரை நீக்கிவிட்டு இந்தியரை நியமித்தார்.தேச விடுதலைக்கு பிறகும் இவர் அஞ்சா நெஞ்சுடன் வாழ்ந்தார். பேச்சிலும் செயலிலும் சீர்திருத்தமும், தேசபக்தியும் இழையோட வாழ்ந்து வழிகாட்டினார். 1951 ஆகஸ்ட் 7ஆம் நாள் மறைந்தார்.பெண் விடுதலை, பெண் உரிமை, பெண்கள் மேம்பாடு இவற்றில் இவர் காட்டிய ஆர்வமும் அக்கறையும் வரலாற்று தடங்களில் இவரை என்றும் வைத்திருக்கும்.

இத்தகைய நூற்றுகணக்கான போராட்டங்களுடாகதான் இதைப்போல ஆயிரக்கணக்கான தியாகங்கள் வழி நடந்துதான் தேசம் விடுதலை அடைந்தது. அந்த வழியில் தேச விடுதலையுடன் இணைந்து உழைப்பாளி மக்களுக்காக போராடிய வீர மங்கைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது... அவர்கள் இனி வருவார்கள். யார் அவர்கள்? இந்த தேசத்திற்கு பூரண விடுதலையை கோரி நின்ற பரம்பரையின் வாரிசுகள் அவர்கள்!

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark