மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

விடுதலைப் போரில் பெண்கள் - 10 



1857ல் நடந்த எழுச்சிகள் கடுமையாக அடக்கப்பட்டன. கொடூரமான ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் மக்கள் திரளாக இந்த போராட்டங்களில் பங்கேற்றனர். ஆங்கிலேயர்களுக்கு ஆச்சரியம் எதுவெனில் வரி விதித்து மக்களை சுரண்டும் மன்னர்களுக்கு ஆதரவாக மக்கள் களமாடமாட்டார்கள் என அவர்கள் நினைத்தது பொய்த்துப் போனதுதான். ஆனால் அதற்கான காரணங்கள் இருந்தன.

முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் இந்தியா வந்து பதிமூன்று ஆண்டுகள் சுற்றுப்பயணம் செய்த அரபு நாட்டு அறிஞர் அல்பர்னி கங்கை கண்ட சோழபுரம் ஏரியை பார்த்துவிட்டு ''இது போன்ற ஏரியை எம் மக்கள் நினைத்துப் பார்க்கவே முடியாது. பிறகு எப்படி கட்ட முடியும்!'' என அதிசயித்தார். இந்திய மன்னர்கள் அந்த அளவிற்கு நீர் பாசனத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து பல நீர்த் தேக்கங்களை கட்டி வைத்திருந்தனர். ஆனால், இருந்த நீர்த் தேக்கங்களைப் பராமரிக்கக் கூட எத்தகையதோர் ஏற்பாட்டையும் ஆங்கிலேயர்கள் செய்யவில்லை. 1854 ஆம் ஆண்டு பொதுப்பணித்துறை ஏற்படுத்தப்பட்டது. ஆனாலும் நில வரி வசூலில் ஒரு சதவீதம் மட்டுமே நீர் பாசனத்திற்கு செலவிடப்பட்டது.

ஆங்கிலேயர்கள் தாங்கள் கைப்பற்றிய இடங்களில் இந்திய மக்களை கொடூரமாக சுரண்டினர். இவர்களது சுரண்டல் இந்திய மன்னர்களுக்கு சாதகமானது. உதாரணத்திற்கு, இந்திய விவசாயிகள் மிகவும் ஏழையாக்கப்பட்டு தூர தேசத்திற்கு பிழைப்புக்காக அலையும் நிலை உருவானது. 1815ஆம் ஆண்டு சென்னை ஆளுனர் இலங்கை காப்பித் தோட்டத்தில் வேலை செய்ய தொழிலாளர்களை அனுப்ப ஏற்பாடு செய்யுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரை வேண்டியபோது, அந்த மாவட்டத்து மக்கள் மலிவான வாழ்க்கை வழங்கும் சொந்த மண்ணை விட்டு வெளியேற விருப்பமற்றவர்கள் எனவும், இலங்கை அரசு பிரத்தியேக ஊக்கத் திட்டங்கள் மூலமே அவர்களை தாய்நாட்டை விட்டு வெளியெற செய்ய முடியும் எனவும் கடிதம் எழுதினார். ஆனால், அடுத்த 20 ஆண்டுகளில் காலனி அரசின் நிலவரிக் கொள்கையால் ஏற்பட்ட இரு பஞ்சங்கள்  (1833-1843) மற்றும் ஆங்கில அரசின் தலையிடாக் கொள்கை எத்தகைய ஊக்க நடவடிக்கையும் இல்லாமலேயே மக்களை வெளிநாடுகளுக்கு குடியேறச் செய்தது. 1843 துவங்கி அடுத்த இரு பத்தாண்டுகளில் சென்னையிலிருந்து இலங்கைக்கு 14 லட்சத்து 46 ஆயிரத்து 407 நபர்கள் ஒப்பந்தக் கூலிகளாகச் சென்றிருந்தனர்.

இத்தகைய நெருக்கடிகளை கொடுத்து, மக்களைச் சுரண்டிதான் ஆங்கில ஏகாதிபத்தியம் காலனி ஆட்சியை நடத்தியது. எனவே தவிர்க்க முடியாமல் அவர்கள் மீதான கோபம் மக்களுக்கு இருந்தது. இதை மிகச் சரியாக பல மன்னர்கள் பயன்படுத்திக் கொண்டனர். முதல் விடுதலை எழுச்சி என்ற போர்க்களம் ஆங்கிலேயர்களால் நிர்மூலமாக்கப்பட்டதும் 1858 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பேரரசின் கீழ் நாட்டு நிர்வாகம் கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்களது சுரண்டல் மேலும் மேலும் அதிகமானது.  1858 ஆம் ஆண்டுக்கும் 1900 ஆண்டுக்கும் இடையில் கொடுமையான பஞ்சங்கள் இந்தியாவை ஆட்டிப் படைத்தன. இதில் மூன்று பஞ்சங்கள் மிகவும் கொடுமையானவை. 

1776-78ல் 36 லட்சம் மக்கள் செத்து மடிந்தனர். 1896-97ல் எழுந்த பஞ்சத்தில் 96 லட்சம் மக்கள் மாண்டனர். 1899-1900ல் எழுந்த பஞ்சத்தில் 60 லட்சம் மக்கள் மாண்டனர். இதிலிருந்து, இந்தியாவிலிருந்து செல்வங்களை கொள்ளையடித்து தங்களது நாட்டிற்கு அனுப்புவதை தவிர இந்திய மக்களைப் பற்றி கொஞ்சமும் ஆங்கிலேயர்கள் கவலைப்படவில்லை என்பது விளங்கும். பஞ்சம் என்பது உணவுப் பொருட்கள் இல்லாததால் வந்ததல்ல. ஆட்சியாளர்களின் கொடுமையான கொள்கையால் வந்தது என்பதுதான் உண்மை. 1776-78 பஞ்சம் குறித்து 1881ல் ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் ஆய்வின்படி அப்பஞ்சத்தின்போது  5 லட்சம் டன் உணவு தானியங்கள் இருப்பில் இருந்தது. 

இந்திய நாட்டு வளங்களை மொத்தமாக கொள்ளையடித்தது மட்டுமல்ல, மலைச்சரிவில் காப்பி, தேயிலை, சணல் போன்றவற்றை சாகுபடி செய்யும் முறையை அறிமுகம் செய்து, மலைகளில், வனங்களில் காலம் காலமாக வாழ்ந்து வந்த அந்நிலங்களின் சொந்தக்காரர்களான ஆதிவாசிகளை அப்புறப்படுத்தினர். 1865ஆம் ஆண்டு வனப் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. தமது உரிமைகளுக்காகப் போராடிய கோல்கள், சந்தாலியர்கள், பில் இனத்தவர், முண்டா போன்ற ஆதிவாசி மக்களை 1878 குற்றப் பரம்பரை சட்டம் மூலம் முடக்கினர். பலர் அழித்தொழிக்கப்பட்டார்கள். 

ஆனால், இதற்கிடையில் இவர்கள் கொண்டு வந்த கல்வி முறை இந்தியாவில் ஒரு படித்த மேல்தட்டு வர்க்கத்தை உருவாக்கியது. ஆனால், இவர்கள் கொடுத்த கல்வி இந்தியர்கள் மத்தியில் நாட்டு நிலையை அசை போட, வறுமையை ஒப்பிட, மாற்றம் கோரவும் தூண்டியது. அதனால்தான் முதல் விடுதலை போராட்டம் முடிந்து பல ஆண்டுகள் கடந்தும் இந்திய விடுதலை போராட்ட கனல் அணையாமல் அடைகாக்கப்பட்டது.

புரட்சிக்குப் பிறகான பத்தாண்டுகளில் படித்தவர்களிடம், இந்திய தேசிய தலைவர்களிடம் பிரிட்டிஷ் ஆட்சி ஓரளவு மக்களுக்கு நல்லது செய்யும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அனுபவம் வேறு மாதிரியாக இருந்தது. வறுமை சுழன்றடித்தது. இந்தியாவின் வறுமை (1876) என்ற தனது நூலில் தாதாபாய் நௌரோஜி விளக்கி இருந்தார். 1885ல் இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. துவக்கத்தில் மனு கொடுக்க மட்டுமே என்றாலும் அது மட்டுமே அவர்களால் கொடுக்க முடியவில்லை. வேறு வழி இல்லாமல் போராட்டங்களையும் துவக்க வேண்டி வந்தது.

"அவன் தனது சக்தியை இழந்துவிட்டான். அவனது ஜீவன் உறிஞ்சப்பட்டுவிட்டது. சொல்லப் போனால் பொருளாதார ரீதியில் அவன் காய்ந்த எலும்புகள் வைக்கப்பட்டுள்ள ஒரு பையை விடக் கீழானவன். அவன் அரை வயிறு சாப்பிடுகிறான். அரை குறையாக உடுத்தியுள்ளான். சிறிதளவு சோறு, நிறைய இலைகள், வேர்கள் இவைதான் அவனது அன்றாட உணவு, சுவையான உணவை அவன் தன் வாழ்நாளில் சாப்பிட்டதேயில்லை. அவன் ஆடைகள் கந்தல்கள். அவனது இருப்பிடம் அழுக்கான சிறு குடிசை. பருவநிலையின் கடுமைகளிலிருந்து அது அவனை காப்பாற்றாது" என சுலப் தைனிக் எனும் வங்கப் பத்திரிக்கை அன்றைய நிலையை படம் பிடித்துள்ளது.

1893ல் பாலகங்காதர திலகர் தேசிய கண்ணோட்டம் எவ்விதம் மாறியது என்பதை படம் பிடித்து காட்டுகிறார். பிரிட்டிஷாரின் ஒழுக்கம், ரயில், தந்தி, சாலைகள், பாலங்கள், பள்ளிகள் ஆகியவற்றைப் பார்த்து மக்கள் எப்படி திகைத்தார்கள் என்று எழுதியுள்ளார். "கலகங்கள் குறைந்தன. மக்கள் அமைதியாக வாழ்ந்தார்கள். கண் தெரியாத ஒருவர் கைக்கம்பில் தங்கத்தை கட்டிக்கொண்டு எப்படி பத்திரமாக காசியிலிருந்து ராமேஸ்வரம் செல்லமுடிகிறது என்றெல்லாம் மக்கள் பேசினார்கள். நாளாக ஆக தங்கம்தான் அரிதானது என்பதை மக்கள் உணர்ந்தார்கள்." 

இந்த நிலையில்தான் இந்தியா இருந்தது. முதல் விடுதலைப் போரில் வீரத்துடன் போராடிய ஆயிரக்கணக்கான பெண்கள் இனி வரும் காலத்திலும் களத்தில் இருக்கத்தான் போகிறார்கள். ஜான்சிராணி, வீரப்பெண் குயிலி, ஜல்காரிபாய், அவந்திபாய், தியாகத்தின் சின்னம் ஹசரத் பேகம் போன்ற போராளிகளைப் பார்த்த தேசம், இன்னும் ஆயிரமாயிரம் வீரத்திலகங்களை பார்க்கத்தான் போகிறது. போர்க்களம் மாறி உள்ளது. படையெடுப்பின் வடிவம் மாறும். ஆனாலும் இந்திய விடுதலைப் போரில் பெண்கள் பங்கெடுப்பு எப்போதும் குறைந்ததில்லை.

(என்ன நடந்தது பிறகு ...)

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark