மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!



அதிகரித்துக்கொண்டே இருக்கிறது கொடுமைகள். எங்கும் நிம்மதியாய் நமது சோதரிகள் நடமாட முடியாதோ என்ற அச்சம் அனைவரையும் சூழ்ந்து வருகிறது. நிம்மதி இழந்து தவிக்கும் சமூக மனநிலை மிகவும் பயம் கொள்ள வைக்கிறது. யார் மீதும் நம்பிக்கை வர மறுக்கிறது. பெண்கள் மீதான வன்முறைகள் சமூக பொதுவெளியில் பல விவாதாங்களை பீறிட்டெழ செய்துள்ளது.
- பெண்கள் உடைகள்தான் காரணம் என மத அடிப்படைவாதிகள்  தொடர்ந்து ஓதிக்கொண்டே இருக்கிறார்கள். ஆபாசமாய் இருக்கிறதாம். அதனால் ஆண்களுக்கு காம உணர்வு தூண்டப்படுகிறது என்கிறார்கள். இதைவிட அபத்தம் எதுவும் இருக்க முடியாது! வாச்சாத்தியிலும், திருக்கோவிலூர் இருளரின் நான்கு பெண்மக்களும் இன்னும் இப்படி ஆயிரமாயிரமாய் சூரையடப்பட்ட நமது சகோதரிகள் என்ன ஜீன்சும் டீ சர்ட்டுமா போட்டிருந்தனர்.  ஜீன்சும் டீசர்ட்டும்தான் காரணம் என்றால் பல நாடுகளில் பெண்கள் வாழவே முடியாதே? அங்கெல்லாம் ஆண்கள் இல்லையா? அல்லது இங்கு இருப்பவர்களுக்கு மட்டும்தான் கண்கள்  இருக்கிறதா?

- இந்தியாவில்தான் இப்படி பாரதத்தில் இல்லை என கிறுக்குத்தனமாய் பேசுகிறார் ஆர்.எஸ்.எஸ் பகவத் இந்த டுபாக்கூர் கம்பெனி ஜந்துக்கள் எங்கு வாழ்கிறரக்ள் என தெரியவில்லை. இனி இந்தியாவில் இவர்கள் பா.ஜ.கட்சிக்கு வாக்கு கேட்டு வரமாட்டார்கள் என நம்புவோமாக. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பெண்களை அனுகுவதில் தாலிபான்களுக்கு கொஞ்சமும் சலைத்தவர்கள் இல்லை. எனவே அவரிடம் இதைவிட முற்போக்காக கருத்தை எதிர்பார்ப்பது நமது தவறுதான்.  

- பெண்கள் தங்கள் உடலை மொத்தமாக மறைத்துக்கொள்ள வேண்டும் என உபதேசங்கள் நடக்கிறது. இந்த ஆதினங்கள் கொஞ்ச நாட்களாக நித்தியானந்தாக்களிடம் பழகியதால் வந்த பிரச்சனை இது. இரவு நேரங்களில் தனியாக போகலாமா? ஊர் சுற்றலாமா என போதிக்கின்றனர். இவிங்க கோவிலுக்குள் நடந்த பாலியல் காட்சிகள் உலகம் முழுவது யூ டியூப் ஏறி ஊர் சுற்றியதை மறந்துவிட்டு ஊருக்கு உபதேசம் செய்கின்றனர்.

இவையெல்லாம் இருக்கட்டும் 

அடிப்படையில் தாய்வழி சமூகத்தில் வந்த மனிதகுலம், தேவைக்கு அதிகமாக உபரி தோன்றிய போது சொத்துரிமைக்காக அவளை அடிமைபடுத்தியது. அந்த அடிமைதனத்தை மொழி, கடவுள், சாதி, மதம், இலக்கியம் போன்ற பண்பாட்டு தளத்தில் உறுதி செய்தது. அதனை தொடர்ந்து வந்த முதலாளித்துவம் அதன் உச்ச வளர்ச்சியில் பெண்களை வெறும் சதை பிண்டமாக மாற்றியது.

1990 களில் இந்தியாவில் துவங்கிய உலகமய வெறியாட்டம் தனியார்மயம் தாளாரமயம் என்ற பெயரில் லாபம் மட்டுமே லட்சியமாக கொண்டு சூரையாட துவங்கியது. பெண்களை வெறும் விளம்பர பதுமைகளாக, அவர்களின் அழகு, உடல், நிறம், நடை உடை பாவனை எப்படி இருக்க வேண்டும் என சமூக பொது புத்தியில் பல விழுமியங்களை பதியம் போட்டது. 23 ஆண்டுகால ஏகாதிபத்திய உலகமய விளைவைதான் இன்று நாம் சந்தித்துக்கொண்டிருக்கிறோம்.

குடும்பங்களில் உள்ள ஜனநாயகமற்ற உரவு முறை யாரையும் யாரோடும் விவாதிக்க விடுவதில்லை. அதன் விளைவு பலவழிகளில் வெளிப்படுகிறது. ஆக பிரச்சனை டெல்லி துவங்கி நாடுமு ழுவதும் பாலியல் வன்புணர்வில் ஈடுபடும் தனி நபர்கள் மட்டுமல்ல.

இரு பத்தாண்டுகள் இளம் தலைமுறையை சீரழித்த அரசியல் கொள்கைக்கு இதில் பங்கில்லை என தப்பிக்க போகிறோமா? குடும்பதளம், பண்பாட்டுதளம், அரசியல்தளம், பொருளாதாரதளம் என்ற நான்கு தளங்களில் இப்பிரச்சனை தொக்கி நிற்கிறது. நாகரீகம் மிக்க சமூகமாக தம்மை நினைத்துக்கொள்ளும் மனித சமூகம் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்த்து திரண்டெழாமல் விடிவு கிடைக்க போவதில்லை. அதற்காக மக்களை திரட்ட காலம் பிடிக்கும் அதுவரை இருக்கிற சட்ட்டங்களை முழுமையாக செயலாக்குவதிலும், புதிய ஆலோசனைகளை உருவாக்கி குற்றங்களை தடுப்பதும் அவசியம். வீதியில் போராடுகிற மக்களுக்கு வாழ்த்துக்களை சொல்வதில் மட்டும் அர்த்தம் இல்லை அவர்களுடன் கை இணைத்திட முன் நோக்கி செல்வோம்.

நேறையதினம் நீதிபதி வர்மா குழுவிடம் மார்க்சிஸ்ட் கட்சி சமர்ப்பித்துள்ள பரிந்துரைகளில்  குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்  கீழே உள்ளது. இவைகளை அரசு பரிசிலனை செய்யலாம்.

1. கூட்டாக வன்புணர்ச்சி, குழந்தைகள் மீதான வன்புணர்ச்சி, கடத்திச் சென்று, அறையில் பூட்டி வைத்து வன் புணர்ச்சி உள்பட கொடூரமான பாலியல் வன்குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் அதிகபட்ச தண்டனையாக சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு வாழ்நாள் முழுவதும் கடுங்காவல் ஆயுள் தண்டனை விதிக்கப்படவேண்டும்.

2. இதர வன்புணர்ச்சி வழக்குகளில், அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படவேண்டும்.

3. மேற்கண்ட இருவகை பாலியல் வன்குற்றங்களிலும், அரசு முன்மொழிந்துள்ள சட்ட மசோதாவில் குறிப்பிடப் பட்டுள்ள குறைந்தபட்ச தண்டனை என்பது அதிகரிக்கப்படவேண்டும். ‘அசாதாரண சூழ்நிலைமைகள்’ என்ற பெயரில் குறைந்தபட்ச தண்டனைக்கும் குறைவாக மேற்கண்ட வழக்குகளில் நீதிமன்றங்களே தண்டனையைக் குறைத்துக்கொள்ள அனுமதி அளிக்கும் எந்த ஒரு விதியும் மேற்கண்ட மசோதாவில் இடம்பெறக்கூடாது.

 4. நீதிமன்றங்களில் பாலியல் வன்குற்றங்கள் தொடர்பான அனைத்து வழக்குகளும் குறிப்பிட்ட கால வரையறை யில் தீர்வுகாணப்படவேண்டும், இதற்காக சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்க சட்டத்தில் வழி செய்யப்படவேண்டும்.

5. பாலியல் வன்முறைகள் தொடர்பான அனைத்து வழக்குகளும், மூன்று மாத காலத்திற்குள் தீர்வுகாணப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் ஒட்டுமொத்த வழக்கின் நடவடிக்கைகளும் முடிய வேண்டும் என்பதால், விசாரணைகள் நடந்து கொண்டிருக்கும் போது, குற்றம் சாட்டப்பட்டவர் மேல்முறையீடு செய்துகொள்ள அனுமதிக்கப்படக்கூடாது.

6. குறிப்பிட்ட காலத்தில் இதுபோன்ற வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது உள்பட சட்டத்தை அமலாக்காத பொது ஊழியர்கள் அவசியம் தண்டனைக்கு உள்ளாக்கப்படவேண்டும். அரசால் முன்மொழியப்பட் டுள்ள மசோதாவில் இது தொடர்பான திருத்தத்தில் குறைந்தபட்ச தண்டனை என்ன என்பது குறிப்பிடப்பட வேண்டும்.

7. பாலியல் வன்முறைக்கு உள்ளான பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரண உதவி உள்பட மறுவாழ்வுக்கான ஏற்பாடுகள் குறித்து சட்டத்தில் அவசியம் வரையறுக்கப்படவேண்டும். 

8. பெண்கள் மீது ஆசிட் வீசி தாக்குவது என்பது ஒரு கடுமையான குற்றமாக கருதப்படவேண்டும். இந்தக் குற்றத்திற்கு குறைந்தபட்ச தண்டனை என்ன என்பது வரையறுக்கப்படவேண்டும். அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படவேண்டும்.

9. பெண்களுக்கு எதிராக பாலியல் வன்குற்றங்களில் ஈடுபடுகிற, 18 வயதுக்கு உட்பட்ட நபர்கள் உள்பட சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டனைக்குள்ளாக்கப்படுவது மற்றும் இத்தகைய குற்றங்களை தடுப்பதற்கான பல்வேறு அரசு அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கண்காணிக்கும் விதமாக உரிய ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்பது சட்டப்பூர்வமாக்கப்படவேண்டும்.

10. இந்திய தண்டனைச்சட்டம் மற்றும் இதர பொருத்தமான சட்டங்களில் பாலியல் வன்முறை தொடர்பான விதிகள், பாதிக்கப்படும் பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு (பெண்களுக்கு) நிவாரணம் அளிப்பதாக இருக்கவேண்டும்; இரு தரப்பினருக்கும் பொதுவானதாக இருக்கக்கூடாது என்ற புரிதல்நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள மசோதாவில் இணைக்கப்படவேண்டும். 

11. பெண்ணின் உடலை ஒரு நுகர்பொருளாக சித்தரிக்கும் மிகவும் மோசமான, பாலியல் வக்கிரத்தன்மை கொண்ட விளம்பரங்களும், பெண்களை கேவலமாகவும் இழிவாகவும் சித்தரிக்கிற செய்திகளும் ஒளிபரப்பப்படுவதையோ, பிரசுரிக்கப்படுவதையோ தடுக்கும்விதத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்; இத்தகைய மோசமான கலாச்சாரத்திற்கு எதிரான உணர்வு ஊடகங்களில் உறுதிப்படுத்தப்படவேண்டும்.

12. பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் குறித்த பாடம், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அனைத்து பாடத்திட்டங்களிலும் கட்டாயமாக்கப்படவேண்டும்; மாணவர்கள், மாணவிகள் மற்றும் இளம் ஆண்கள், இளம் பெண்களுக்கு பாலின சமத்துவம் குறித்து போதிக்கும் பாடங்கள் இணைக்கப்படவேண்டும்.

1 Responses to பெண்கள் மீதான பாலியல் கொடூரம் - தனி நபர்களின் பிரச்சனையா?

  1. நல்ல பதிவு தோழர்.வாழ்த்துக்கள்!

     
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark